நிழல்களின் நிறம் காண தேடிவரும் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கின்றேன்

திங்கள், 28 ஜனவரி, 2013

பிரிவைத்தேடும் பிரியமானவர்களுக்கு...!


நீங்கள் என்ன 
பேசாத ஓவியங்களா 
உங்கள் உதிரத்தில் 
ஸ்பரிசங்கள் தீண்டாத 
உயிர் அணுக்களா 
கலந்திருக்கின்றன 
எதுவானாலும் சொல்லுங்கள் 
உங்களைவிட்டு 
உயரப்பறக்கிறேன் 
அதற்காக 
வானம்பாடி அல்ல நான் 
உள்ளூரில் ஓலமிடும் 
ஊர்க்குருவிதான் 
சிறகுகள் சிறிதெனினும் 
உறவுகள் ஓராயிரம் கொண்டவன்..!

நட்பும்  வேண்டாம் 
நளினமும் வேண்டாம் 
எதிரியைப்போல் எனிலும் 
எட்டியாவது பாருங்கள் 
உறுதி செய்கிறேன் 
தெரிந்தவர்கள் என்று 
பழகிய விழிகளுக்காவது 
பாவவிமோசனம் கிடைக்கட்டும்.

அந்நிய தேசத்தில் 
அநாதரவான என்  கால்கள் 
திசைகள் மறந்து போனது 
தீண்டாமை பேணும் 
நட்பின் சாரல்களால் 
ஆர்ப்பரிக்கும் அலைக்கும் 
அடம்பிடிக்கும் பிள்ளைக்கும் 
விலகி இருப்பதுதான் தீர்வு 
ஆதலால் விலகிக்கொள்கிறேன் 

உணர்வுகளை நேசிக்கும் 
உயிர்களைதேடுகின்றேன் 
ஓட்டுக்கேளுங்கள் 
உங்கள் ஆன்ம அசைவுகள் சொல்லும் 
அழகிய வாழ்வின் 
அர்த்தங்களையும்,அற்புதங்களையும் 
உணர்ந்துகொண்டால் 
திரும்பிப்பாருங்கள் 
இந்த உலகமே 
உங்களுக்காய்  காத்திருக்கும் 
தலைவணங்கியபடியே 
ஆனால் 
நான் மட்டும் தொலைந்திருப்பேன் 
தடயங்கள் ஏதுமின்றி...!

---சீராளன்---

திங்கள், 7 ஜனவரி, 2013

நாளைய பொழுதில்....!


பிறப்பினில் சிறப் பிழக்கும்
பேதைமனம் கலங்கி நிற்கும்
உறவு சொல்ல வழியின்றி
உள்ளங்கள் ஊமையாகும்..!

கடந்துபோகும் நதிகளிலே
கைகழுவும் நாணல்களாய்
கரைந்துவரும் கண்ணீரில்
கால்நனைக்கும் எதிர்காலம்....!

மானுட வேதங்கள்
வர்ணபேதங்களில் தலைமுழுகும்
சம்ரதாய சடங்குகள்
சாஸ்த்திரங்களை சாகடிக்கும்..!

விழியசைக்கும் நிமிடத்தில்
விலைபோகும் மனச்சாட்சி
விதிவழி தடுமாறி
விலங்கினத்தை உறவுகொள்ளும்..!

தேடலின் தவிப்புகளில்
விடலைகள் தடுமாறும்
கூடலை நிஜமென்று
குற்றுயிராய் இனம் அழிக்கும்..!

பயனிலைகள் தவறி விடும்
பாடுபொருள் பழிசுமக்கும்
இலக்கண யாப்புக்கள்
இடம் மாறி மெய்மறைக்கும்..!

அலையுற்ற கரைகளில்
நிலையற்ற நுரைகளாய்
காற்றோடு கரையும்
காந்திய வாதம்..... !

ஆலயமணி கேட்க
ஆன்மாக்கள் வெறுப்படையும்
ஆன்மீக ராகங்கள்
அகிலத்தில் ஓய்வடையும்..!

கணனித் திரைகள் மட்டும்
கண்கண்ட தெய்வமாகும்
கால்படா தேசங்கள்
காந்தமுனை வரைநீளும்.. .!

 நாளைய பொழுதின்
 நவீன தெருக்களிலே 
பண்பாடு துகிலுரிந்து
பாதைகளை.அலங்கரிக்கும்....!

மாற்றங்கள் வேண்டுகின்ற
மானிட உருவங்கள்
அநீதிக்கே அடிமையாகி
அன்பிலாராய் உருமாறும்....!

நிழல்களின் நிறங்கள் தேடும் இவன் சீராளன்