பிறப்பினில் சிறப் பிழக்கும்
பேதைமனம் கலங்கி நிற்கும்
உறவு சொல்ல வழியின்றி
உள்ளங்கள் ஊமையாகும்..!
கடந்துபோகும் நதிகளிலே
கைகழுவும் நாணல்களாய்
கரைந்துவரும் கண்ணீரில்
கால்நனைக்கும் எதிர்காலம்....!
மானுட வேதங்கள்
வர்ணபேதங்களில் தலைமுழுகும்
சம்ரதாய சடங்குகள்
சாஸ்த்திரங்களை சாகடிக்கும்..!
விழியசைக்கும் நிமிடத்தில்
விலைபோகும் மனச்சாட்சி
விதிவழி தடுமாறி
விலங்கினத்தை உறவுகொள்ளும்..!
தேடலின் தவிப்புகளில்
விடலைகள் தடுமாறும்
கூடலை நிஜமென்று
குற்றுயிராய் இனம் அழிக்கும்..!
பயனிலைகள் தவறி விடும்
பாடுபொருள் பழிசுமக்கும்
இலக்கண யாப்புக்கள்
இடம் மாறி மெய்மறைக்கும்..!
அலையுற்ற கரைகளில்
நிலையற்ற நுரைகளாய்
காற்றோடு கரையும்
காந்திய வாதம்..... !
ஆலயமணி கேட்க
ஆன்மாக்கள் வெறுப்படையும்
ஆன்மீக ராகங்கள்
அகிலத்தில் ஓய்வடையும்..!
கணனித் திரைகள் மட்டும்
கண்கண்ட தெய்வமாகும்
கால்படா தேசங்கள்
காந்தமுனை வரைநீளும்.. .!
நாளைய பொழுதின்
நவீன தெருக்களிலே
பண்பாடு துகிலுரிந்து
பாதைகளை.அலங்கரிக்கும்....!
மாற்றங்கள் வேண்டுகின்ற
மானிட உருவங்கள்
அநீதிக்கே அடிமையாகி
அன்பிலாராய் உருமாறும்....!
நிழல்களின் நிறங்கள் தேடும் இவன் சீராளன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக